Monday, June 23, 2008


ஜீன்ஸ்...

முகம் பார்த்து

வாலாட்டவும்...
மெலிதான முனகலால்
அன்பின் மிகுதியை
வெளிப்படுத்தவும்...
நம்பத்தக்க வழித்துணையாய்
கூடவே வரவும்...

எப்படியோ
கற்றுக் கொண்டுவிடுகிறது
எல்லா நாய்க்குட்டிகளும் !...

Tuesday, June 17, 2008


உன் உதட்டுச்
சிரிப்பிற்கும்
ஓரவிழிப் பார்வைக்கும்
தெரியாது...

என்
உள் மனதிற்கும்
உடைந்து விழுந்த
கண்ணீருக்கு மட்டுமே
தெரியும்...

நான் உன்மேல்
வைத்திருந்த காதல்...


எப்படி மறப்பது உன்னை...?

என் கண்ணாடி வீட்டில்
கல்லெறிந்து போயிருக்கிறது
உன் சிரிப்பொலி

என் ஈரநிலங்களில்
அழுத்தமாய் பதிந்திருக்கிறது
உன் பாதச் சுவடுகள்

பட்டப்பகலில் துணிகரமாய்
என்னை கொள்ளையடிதிருக்கிறது
உன் அழகு

எழுத்துக் கூட்டி படித்த
என்னை
கவிஞனாக்கியிருக்கிறது
உன் கண்கள்

என் பௌர்ணமிகளை
மொத்த விலைக்கு
வாங்கியிருக்கிறது
உன் முகம்

என் தியான வேளைகளிலும்
குறுக்கிட்டு
குழப்பியிருக்கிறது
உன் பெயர்

என் நந்தவனத்தில்
தீ வைத்திருக்கிறது
உன் அசைவுகள்

இப்படி
இப்படியேல்லாமிருக்க

எப்படி
மறப்பது உன்னை...?



Sunday, June 15, 2008

கவிதையோடு இருத்தல்

மழையில் நனைந்துகொண்டே
நடக்கும் சந்தோசத்தைப் போன்றது
உன்னோடிருப்பது

கொஞ்சம் கொஞ்சமாய்
அழிந்து போகும்
மெழுகுவர்த்தியின்
துயரத்தைப் போன்றது
உன்னோடு இல்லாதது

எதிரெதிர் இடங்ளேனினும்
இரண்டையும் நேசிக்கிறேன்
ஏதோ ஒரு விதத்தில்

எனக்குள் நீ
கவிதையாய்
பதிவாகிக் கொண்டேயிருப்பதால் !

Friday, June 13, 2008

தோல்விகள்... தோல்விகளல்ல...

பூக்கள்
அழகு மாறாமல்
புன்னகைத்துக் கொண்டேயிருக்கின்றன
கல்லறையிலும்

விழுந்தாலும்
நதியாய் ஓடிக்கொண்டேயிருக்கிறது
அருவி

வெட்ட... வெட்ட
விடாமல் தழைகிறது
வேப்பமரம்

தலைகீழாய்ச் சாய்த்தாலும்
மேல்நோக்கியே எரிகிறது
நெருப்பு

புதைக்கப்பட்ட விதை
வெடித்துக் கிளம்பி
வெளி வருகிறது
ஆவேசமாய்

இறந்த சூரியன்
உயிர்த்தெழுந்து வருகிறது
மறுநாள்...
புத்துணர்ச்சியோடு

தோல்வியை
மீண்டுவரவே இயலாத
மரணமாகப் பார்ப்பது
மனிதநேயம் மட்டும்தான் !....

Thursday, June 12, 2008

எது நடக்கிறதோ.....

வானம் தரிசிக்கும் வாய்ப்பு
கிளைகளுக்குக் கிடைப்பது
இலையுதிர்காலத்தில்தான்

சர்வநிச்சயமாக உணரமுடியாது
நிழலின் அருமையை
வெயில் இல்லாவிட்டால்

பகலை காட்டிலும்
அதிகமாய் ரசிக்கத்தக்கது
இரவு

வெற்றி
ஒருவகையில் சிறைவாசம்
தோல்வி
ஒருவகையில் விடுதலை

வளர்ச்சியைப் போல
வறட்சியும் ஒரு அனுபவமே

செல்வம்
வசதியைக் கொடுக்கும்
வறுமைதான்
வாழ்க்கையை போதிக்கும்

ஆம் !
எது நடக்கிறதோ
அது நன்றாகவே நடக்கிறது...

Wednesday, June 11, 2008

ஒரு பனிக்காலைப் பொழுது....


மழையைப் போல்
ஆனால்
மௌனமாய் பெய்து கொண்டிருக்கிறது
பனி

இரவை வழியனுப்பும் பொருட்டோ
பகலை வரவேற்கும் பொருட்டோ
பாடிக் கொண்டிருக்கின்றன
பறவைகள்

மென்மையாய்
வெண்மையாய்
ஒளிர்ந்து கொண்டிருக்கிறது
கிழக்குக்கான சூரியன்

உற்றுக் கவனித்தாலொழிய
உணர முடியவில்லை
தாவரங்களின் நுண்ணிய அசைவினை

கோலத்தின் நடுவே
அதிசயமாய் பூத்திருக்கிறது
பூசணி பூக்கள்

நட்சத்திரங்கள்
மேகங்கள்
நிலா - என
எதுவுமற்று
வெறுமையாய் இருக்கிறது
நீ(ல)ள் வானம்

மனதின்
ஒவ்வொரு அடுக்குகளிலும்
உடலின்
ஒவ்வொரு அணுக்களிலும்
தெரிகிறது
ஒருஅபாரமான புத்துணர்ச்சி

இரவின் அமைதி கலைந்து
இலக்கு தெரியாத
எந்திர வாழ்க்கை
தொடங்குகிறது

கொஞ்சம்.... கொஞ்சமாக....


( இது என்னோட முதல் பதிவு கொஞ்சம் பார்த்து கமெண்ட்ஸ் கொடுங்க )